அடுத்த நிலநடுக்கம்.. இந்தியாவில் தானாம்! துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த டச்சு ஆய்வாளர் பகீர்791108266
அடுத்த நிலநடுக்கம்.. இந்தியாவில் தானாம்! துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த டச்சு ஆய்வாளர் பகீர்
டெல்லி: துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டியே டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் கணித்திருந்தார். இதற்கிடையே அடுத்த பெரிய நிலநடுக்கம் இந்தியாவில் ஏற்படக் கூடும் என்று கணித்து அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை துருக்கி நாட்டில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, மற்றும் சிரியா நாடுகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன.
அதன் பின்னரும் அடுத்தடுத்த நாட்களில் நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு, ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பல நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் அங்குப் பாதிப்புகள் மிகவும் மோசமடைந்தன.
துருக்கி நிலநடுக்கம்
நிலநடுக்க ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், இரவு நேரத்தில் அங்கு நிலவும் கடுமையான பனி மீட்புப் பணிகளுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15000 தாண்டியது.. துருக்கி நாட்டில் மட்டும் இதுவரை 12,931 பேரும் சிரியாவில் 2992 பேரும் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,383ஆக உயர்ந்துள்ளது.
முன்கூட்டியே கணிப்பு
துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை அது ஏற்பட மூன்று நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்படும் என்பதை நெதர்லாந்து ஆய்வாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் கணித்திருந்தார், அதாவது விரைவில் மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும் என்று கணித்து ட்வீட் செய்திருந்தார். இதற்கிடையே அவர் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுக்குச் சிக்கல்
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நில அதிர்வு இறுதியில் பாகிஸ்தான், இந்தியாவைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடக்கும்
அந்த வீடியோவில் டச்சு ஆராய்ச்சியாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் மேலும் கூறுகையில், 'வளிமண்டல ஏற்ற இறக்கங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த பகுதிகளில் பெரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதை துல்லியமான கணிப்பு இல்லை.. தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.. அனைத்து பெரிய நிலநடுக்கங்களும் வளிமண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.. மேலும், இது தற்காலிகமான கணிப்புகள் மட்டுமே' என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
அவரது இந்த வீடியோ பதிவு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. துருக்கியில் இந்தளவுக்குப் பேரழிவு ஏற்படுவதை முன்கூட்டியே கணித்தவர் என்பதால் இணையத்தில் இது பேசுபொருளாகியுள்ளது. நாம் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், மற்றொரு தரப்பினர் நிலநடுக்கங்களை எல்லாம் முன் கூட்டியே கணிக்க முடியாது என்றும் இவர் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
வாய்ப்பே இல்லை
துருக்கி நிலநடுக்கத்தைத் தவிர.. அவர் எத்தனை நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணித்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்தியா நகரங்களில் இருக்கும் பெரும்பாலான கட்டிடங்கள் நிலநடுக்கங்களைத் தாங்கும் தன்மையுடன் கட்டப்படவில்லை. இதனால் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்றும் பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். டச்சு ஆராய்ச்சியாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸின் இந்தியா குறித்த கணிப்பு தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
Comments
Post a Comment