ஆன்லைன் பண மோசடி; 20 கோடியை இழந்த ஐசிசி
ஆன்லைன் பண மோசடி; 20 கோடியை இழந்த ஐசிசி
உலக முழுக்க சைபர் மோசடிகள் மூலம் பணமிழப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த வலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமும் (ஐசிசி) சிக்கிக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஆன்லைன் வழியாக பண மோசடியில் ஈடுபடும் கும்பல் ஐசிசியையும் விட்டு வைக்கவில்லையா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
போலி மின்னஞ்சல்கள், போலியான பணப் பரிவர்த்தனைகள் போன்ற செயல்களின் மூலம் ஐசிசி தரப்பின் வங்கி கணக்கு மற்றும் அதில் பணி புரியும் அதிகாரிகள் ஆகியோரிடம் இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது. மோசடியில் ஐசிசி இழந்த பண மதிப்பு கிட்டத்தட்ட ரூ.20கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. விளையாட்டு தொடர்பான இணையதளமான இஎஸ்பிஎன் மோசடி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சைபர் மோசடியில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடித்தவர்கள் யார்..? அவர்கள் ஒரு கும்பலா அல்லது தனிநபர்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் எஃப்.பி.ஐ(FBI) இந்த மோசடி குறித்து விசாரித்து வருகிறது. தங்களது ஊழியர்களே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐசிசி யின் வங்கிக் கணக்கிலிருந்து எந்த முறையில் பண பரிவர்த்தனை நடைபெற்றது என்றும் தங்களது அலுவலகத்திலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ சைபர் மோசடியில் ஈடுபட்ட கும்பல்களோடு தொடர்பில் இருந்தார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. பணவரிவர்த்தனை ஒரே முறையில் ஒட்டுமொத்தமாக நடைபெற்றதா அல்லது சிறிது சிறிதாக கொள்ளையடித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறது எஃப்.பி.ஐ.
Comments
Post a Comment