சென்னை வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி தங்கத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்..! மீண்டும் அட்டகாசம் ஆரம்பம்599789775
சென்னை வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி தங்கத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்..! மீண்டும் அட்டகாசம் ஆரம்பம்
சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற கிளையில் புகுந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களை கட்டிப்போட்டு , 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றனர்.
சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் சென்னையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வங்கியின் வாடிக்கையாளரான ராணி, அண்ணா நகரைச் சேர்ந்த டேவிட் ஆகியோர் வங்கிக்கு வந்துள்ளனர். பாதி ஷட்டர் மூடப்பட்ட நிலையில் இருந்த வங்கியின் உள்ளே டேவிட் சென்றதும் அங்கு யாரும் இல்லை.
ஒரு பெண் உட்பட ஊழியர்கள் மூன்று பேரும் கட்டிப் போடப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வாடிக்கையாளர் டேவிட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும், தகவல் அறிந்து வடக்கு மண்டல காவல் கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வங்கியின் காவலாளி சரவணன் வங்கி பெண் ஊழியர் ராஜலட்சுமி உட்பட 3 பேரையும் மீட்ட போலீசார் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வங்கியில் வாடிக்கையாளர் சேவை மைய மேலாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
வாடிக்கையாளர் சேவை மைய மேலாளரான முருகன், மதிய உணவிற்கு பிறகு காவலாளி சரவணன், பெண் ஊழியர் ராஜலட்சுமி மேலும் ஒரு ஊழியர் என மூன்று பேருக்கும் மாஸா குளிர்பானம் கொடுத்துள்ளார். வேண்டாம் என்றவர்களிடம் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார். அந்த குளிர்பானம் கசப்பாக இருந்ததால் அவற்றை அருந்த மறுத்துள்ளனர்.
அதற்குள்ளாக வெளியில் காத்திருந்த கூட்டாளிகளை முருகன், உள்ளே வர சொன்னதும் அடுத்த சில நிமிடத்தில் அங்கு வந்த ஆசாமிகள் மூன்று ஊழியர்களின் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களை கட்டிப்போட்டு நகை பெட்டகத்தின் லாக்கர் சாவிகளை கைப்பற்றியுள்ளனர்.
எந்தெந்த லாக்கரில் எவ்வளவு நகைகள் இருக்கிறது என்பது முருகனுக்கு முன் கூட்டியே தெரியும் என்பதால் அடுத்த சில நிமிடங்களில் ஒட்டுமொத்த நகைகளையும் அள்ளிக் கொண்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது விசாணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாடி படவட்டம்மன் பகுதியைச் சேர்ந்த வங்கியின் ஊழியரான கொள்ளையன் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளின் அடையாளங்களை யில் இருந்து கைப்பற்றிய காவல் துறையினர் அவர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகனத்தின் விவரங்களை கொண்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்ளையர்கள் மூவரும் சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.
வங்கி லாக்கரில் இருந்த பொதுமக்களின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து இந்த வங்கியில் அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். லட்சக்கணக்கான மதிப்புடைய நகைகளை அடகு வைத்த பெண்கள் கண்ணீர் சிந்தினர்.
கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் சென்னையில் வங்கிகொள்ளை அரங்கேறி இருப்பது குறிப்பிடதக்கது.
Comments
Post a Comment