காய்ச்சல் இன்றி COVID-19 தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுவது சாத்தியமா..?


காய்ச்சல் இன்றி COVID-19 தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுவது சாத்தியமா..?


தமிழகம் உட்பட நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது. பல வாரங்களாக கட்டுக்குள் இருந்து கணிசமாக குறைந்து கொண்டே வந்த பாதிப்பு, மீண்டும் லேசாக வேகமெடுத்துள்ளதால் பழையபடி சில கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கோவிட் தொற்று பாதிப்பு சில முக்கிய வெளிப்படையான அறிகுறிகளை கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமான அறிகுறி காய்ச்சல். தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலான நபர்கள் அனுபவிக்கும் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல் முக்கியமான ஒன்று. தவிர அனைத்து கொரோனா வேரியன்ட்களிலும் காணப்படும் பொதுவான அறிகுறியாகவும் காய்ச்சல் உள்ளது. எனினும் பலருக்கும் எழும் கேள்விகளில் ஒன்று காய்ச்சல் இல்லாமல் COVID-19 தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுமா என்பது தான்.

கொரோனா பாதிப்பு ஏன் காய்ச்சலை ஏற்படுத்துகிறது?

பொதுவாக காய்ச்சல் என்பது தொற்றுக்கு எதிராக நமது உடலில் ஏற்படும் இயற்கையான எதிர்வினை ஆகும். வெளியில் இருந்து நம் உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு அதை அழிக்க முயற்சிக்கிறது நம்முடைய நோயெதிர்ப்பு அமைப்பு. இந்த செயல்முறை உடலின் வெப்பநிலையை உயர்த்துகிறது. இதுவே மருத்துவ ரீதியாக காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது வெளியில் இருந்து உடலில் நுழைந்த நோய்க்கிருமிகள் உடலில் பெருகுவது கடினமாகிறது. சுருக்கமாக சொன்னால் வெளியிலிருந்து உள்நுழையும் கிருமிகளுக்கு எதிரான உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் போராட்டமே காய்ச்சல். கோவிட்-19 தொற்று விஷயத்திலும் இதுவே நடக்கிறது.

காய்ச்சல் இன்றி ஒருவருக்கு கோவிட் பாதிப்பு இருக்க முடியுமா?

ஒரு முக்கிய ஆய்வில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 55.5% பேருக்கு ஆரம்ப நாட்களில் காய்ச்சல் ஏற்படுகிறது. பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் தீவிரத்தை பொறுத்து உடல் வெப்பநிலை மிதமானது முதல் மிக கடுமையாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதே ஆய்வானது கணிசமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படுவதில்லை என்ற தகவலையும் தருகிறது.

லேசான மற்றும் அறிகுறியற்ற நிகழ்வுகளில் இது போல காய்ச்சல் ஏற்படாமல் போவது சாத்தியமே என்கிறார்கள் நிபுணர்கள். காய்ச்சல் வரவில்லை என்பதற்காக ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸை அழிக்க திறமையாக செயல்படவில்லை என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் ஒவ்வொருவரின் நோயெதிர்ப்பு அமைப்பும் வித்தியாசமாக செயல்படுகிறது.

லாங் கோவிட் என்றால் என்ன..? எத்தனை நாட்கள் வரை நீடிக்கும்..? விவரங்கள் இங்கே...

கோவிட்டின் பொதுவான அறிகுறிகள்:

மேல் சுவாச மண்டலத்தை பாதிக்கும் கோவிட் பலவித அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றுள் பொதுவானவை.. காய்ச்சல், குளிர், இருமல். சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தசை வலி, கடும் உடல் வலி, தலைவலி, தொண்டை வலி அல்லது எரிச்சல், சுவை அல்லது வாசனை உணர்வு இழப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு. வேரியன்ட்கள், அடிப்படை சுகாதார நிலைமைகள், பாலினம் மற்றும் வயது ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது கோவிட் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தொற்று பாதிப்பு இருப்பதாக ஒருவர் அறிகுறிகளை உணர்ந்தால் முதலில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பின் தொற்று பாதிப்பு தானா என்ற உறுதிப்படுத்தலுக்காக நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நான்காம் அலை வருமா வராதா என்ற குழப்பத்திற்கு மத்தியில் நோய் தொற்றின் அபாயத்தை குறைக்க, எப்போதும் மாஸ்க் அணிவது, சரியான சுகாதாரத்தை பராமரிப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் தடுப்பூசி போட்டு கொள்வது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

 

Comments

Popular posts from this blog