வரலாறு காணாத அளவு.. இனி விமான கட்டணமும் உயரும்..!
வரலாறு காணாத அளவு.. இனி விமான கட்டணமும் உயரும்..!
டெல்லி: வரலாற்றில் இதுவரை இல்லாத நிலையில் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 666 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையைப் போலவே விமான போக்குவரத்துக்கு பயன்படும் ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் எனப்படும் விமான போக்குவத்து எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
விமான எரிபொருள்
கடந்த பல மாதங்களாக விமான எரிபொருளின் விலை மாற்றமில்லாமல் இருந்த வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விமான எரிபொருளின் விலை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. விமான எரிபொருள் விலையை 8.5 சதவீதம் உயர்த்திய அரசு, விமான கட்டணத்தையும் விரைவில் அதிகரிக்கலாம் என அறிவித்தது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனமும், ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் விலையை உயர்த்தி அறிவித்தது.
18 சதவீதம் உயர்வு
கடந்த ஜனவரி மாதம் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டர் ரூபாய் 6743 அதிகரிக்கப்பட்டது. அப்போது டெல்லியில் புதிய விலையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் 86308.16 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத நிலையில் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் உயர்ந்ததை அடுத்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர், அதாவது ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் அதிகரித்துள்ளது.
6வது முறையாக விலை நிர்ணயம்
தற்போது ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 666 ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் தொடர்ந்து 6வது முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை மொத்தம் 36 ஆயிரத்து 643 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஒன்றாம் தேதி மற்றும் 16 ஆம் தேதியில் விமான எரிபொருள் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விமான கட்டணம்
புதிய விலை இன்று ( 16.03.22) முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான டிக்கெட் விலையில் கணிசமான தொகை விமான எரிபொருள் மற்றும் வரிக்கு செல்லும் என்பதால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு கட்டணத்தை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை எந்த ஒரு விமான நிறுவனத்திலிருந்தும் முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதே வழியை பின்பற்றி பெட்ரோல் டீசல் விலையையும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment